Thursday, April 30, 2009

மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு? ம.ம.க. அறிவிப்பு.

மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு?
மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிடும் அறிக்கை


சமூக ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் ம.ம.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக முஸ்லிம் சமுதாயமும், தமுமுக - மமக தொண்டர்களும் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.


மனிதநேய மக்கள் கட்சி சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை, மத்திய சென்னை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியும், தென்காசியில் புதிய தமிழகமும் போட்டியிடுகின்றன.


இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சி போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கோரினர்.


முஸ்லிம் சமூகத்தின் வாக்கு பலத்தையும், மனிதநேய மக்கள் கட்சி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களிடம் பெற்றிருக்கும் ஆதரவையும் அரசியல் கட்சிகள் உணர வேண்டும், சமுதாயத்தின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் களம் கண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நமது சமுதாயத்தை உதாசீனப்படுத்திய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதேபோல மதவாத பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் மற்ற தொகுதிகளில் நமது ஆதரவை வழங்க வேண்டியுள்ளது.


நமது பலத்தை உணர்ந்து சமுதாயத்தில் நமது கட்சிக்கு இருக்கும் வாக்கு வலிமையை அறிந்து நம்மிடம் நேரில் வந்து ஆதரவு கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை அவர்கள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கும். ஆனால் இது ஆதரவு மட்டும்தான், களத்தில் இறங்கி வேலை செய்வது, வெற்றிபெற உழைப்பது என்பது அர்த்தமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தென்காசியில் நமது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் போட்டியிடுவதால் அங்கு போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு இல்லை.


திமுக, அதிமுக, பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளிலும் இதேபோல் காங்கிரஸ், அதிமுக, பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அந்த கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது நற்பண்பு கொண்ட வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கு மாறு ம.ம.க. கேட்டுக் கொள்கிறது.


இதுதான் பாராளுமன்றத் தேர்தலில் நமது நிலைப் பாடாகும். பரவலான வாக்கு வங்கி இருந்தும் பொருளாதார பலமின்மையால் ஒருசில தொகுதிகளில் மட்டுமே நாம் போட்டியிடும் சூழல் உள்ளதால் நாம் போட்டியிடும் தொகுதிகளில் கடுமையாக உழைக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டியிருப்பதால் மற்ற தொகுதிகளில் நாம் இதுபோன்ற நிலைப்பாடுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.

1 comment:

  1. மேற்கு வங்காளம் நந்திகிறாம் ல் முஸ்லிம்களை கொன்றொழித்த, முஸ்லிம் சகோதரிகளின் கற்பை சூரையாடிய கம்யூனிஸ்ட் களுக்கா ஆதரவு??

    ReplyDelete