Friday, May 15, 2009

கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?

சென்னை ஐஸ் அவுஸ் வாக்கு சாவடியில் மோதல் சம்பவம் முறைகேடு நடந்துள்ளதா என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை.
கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?


சென்னை, மே.15 சென்னை ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

வன்முறை-கலவரம்
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறன், அ.தி.மு.க. சார்பில் முகமதுஅலி ஜின்னா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். மத்திய சென்னை தொகுதியில் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடைபெற்றது. அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள என்.கே.டி. பெண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடவந்த திமுகவினரை தடுத்த மனித நேய மக்கள் கட்சியினர் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சென்னை லயோலா கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரி விசாரணை
இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நேற்று மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா, மத்திய தேர்தல் பார்வையாளர் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் பார்வையிட்டனர். இந்த வாக்கு சாவடியில் தேர்தல் நடைபெற்றபோது முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா வன்முறை நடைபெற்ற வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்பு இது சம்பந்தமாக அறிக்கையை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அனுப்பிவைத்தார். இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

No comments:

Post a Comment