Thursday, May 14, 2009

சென்னை ஐஸ் அவுஸ் பகுதி போர்க்களமானது

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியே போர்க்களமானது

தி.மு.க-மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடும் மோதல் 8 பேர் காயம்; கார்கள், வீடு அடித்து நொறுக்கப்பட்டன
சென்னை, மே.14 சென்னை ஐஸ் அவுஸ்சில் தி.மு.க- மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். தி.மு.க. பகுதி செயலாளரின் வீடும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளின் 2 கார்களும் தாக்குதலில் சேதம் அடைந்தது.

போலீஸ் கமிஷனரிடம் மனு
மத்திய சென்னை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி நேற்று காலை 10.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருவல்லிக்கேணி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும், எனவே 97-வது வார்டில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


இந்த நிலையில், 12 மணிக்கு ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் கும்பல் ஒன்று கள்ளஓட்டு போட முயற்சி செய்வதாக கூறி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 கார்களில் அங்கு வந்தனர். அப்போது அங்குள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான தி.மு.க.வினர் கூட்டமாக கூடியிருந்தனர். அப்போது தி.மு.க.வினருக்கும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போர்க்களமானது
காரில் வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை தாக்கினார்கள். இதில், அசன் அலி என்பவருக்கு கார் கண்ணாடி குத்தியது. மேலும், காரில் இருந்தவர்களுக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காருக்குள் இருந்த 7 பேரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

உருட்டுக் கட்டை தாக்குதலில் காயம் அடைந்த சிலர் ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. உருட்டுக் கட்டைகளையும் சுழற்றி அடித்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் அந்த சாலையே போர்க்களம் போல காட்சியளித்தது. மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வந்த 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரக்காரர்கள் ஓட்டம்
இந்த மோதல் சம்பவம் பற்றி சென்னை நகர் முழுவதும் காட்டுத்தீ போல தகவல் பரவியது. உடனடியாக ஐஸ் அவுஸ் பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரோடும், அதிரடிப்படை போலீசாரோடும் ஐஸ்அவுஸ் பகுதிக்கு விரைந்தனர். போலீஸ் படையினர் விரைந்து வருவதை பார்த்து கலவரக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மனிதநேயமக்கள் கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு நடந்ததாக தகவல் கிடைத்தது. உடனே துணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிடுவது போல திரண்டனர். ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் அப்துல்சமதுவை அழைத்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டப்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதிமொழி அளித்தார்.

4 பிரிவின் கீழ் வழக்கு
மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியிடமும் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அதன்பிறகு, மனிதநேய மக்கள் காட்சி சார்பில் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மீது ஐஸ்அவுஸ் போலீசார் இ.பி.கோ 324, 147, 148, 502/2 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வீடு மீது கல்வீச்சு
இதற்கிடையே தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் வீடு மீது பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினார்கள். வீட்டின் இரும்புக் கேட்டை வளைத்து, பயங்கர தாக்குதல் நடந்தது. வீட்டின் முன்பக்க அறையில் இருந்த ஒரு ஸ்கூட்டர், டி.வி. கம்ப்யூட்டர் மற்றும் மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரின் வீடு அருகே இருந்த தி.மு.க.வின் தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள்.

போலீசார் அடித்து விரட்டினர்
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் முகாமிட்டிருந்த கமிஷனர் ராதாகிருஷ்ணன் 100 போலீசாருடன் டாக்டர் பெசன்ட் ரோட்டில் அணிவகுத்து வந்தார். அந்த ரோட்டில் அனைத்து தெருக்களிலும் புகுந்து கூட்டமாக கூடி நின்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதர்சயீத் அங்கு வந்தார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அவர் கடுமையான வாக்குவாதம் செய்தார். தி.மு.க.வினர் திருவல்லிக்கேணி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புகார் கூறினார். அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் ஐஸ்அவுஸ் பகுதியில் அமைதி நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:

மறுவாக்குபதிவு
தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர் தலைமையில் 100&க்கும் மேற்பட்ட ரவுடிகள் மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் அசன் அலி, ஜாகீர் உசேன், காஜாபாய், ஹைதர் அலி, கலாவுதீன், பாரூக், நூர்ஜான் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேர்மையாக நடக்கவில்லை. கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. எனவே இந்த 10 வாக்குசாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.

தொடர்ந்து பதற்றம்
ஹைதர் அலி போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுத்தார். காயம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் முதலில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். 2 பேருக்கு கண்ணில் அடிபட்டிருந்ததால் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியிலும் மற்றவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
தி.மு.க. தரப்பில் காயம் அடைந்த சாரங்கபாணி என்பவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு
ஐஸ்அவுஸ் மோதல் சம்பவம் தொடர்பாக, தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட 20 பேர் மீது ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதலை தூண்டியதாக மத்திய சென்னை தி.மு.க.வேட்பாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் வரவில்லை என்பதால் தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

நேற்று மாலையில் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கிய பின்னரே, மனிதநேய மக்கள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி

No comments:

Post a Comment