Tuesday, May 12, 2009

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார்.ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர்.

எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.

மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. 2008 முதல் நடப்பு வரையில் மட்டும் 18 பேர்களுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இலவசமாக செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவைக்காக நிறுத்தி வைத்துள்ளோம். கண்சிகிச்சை முகாம்கள், பொது மருத்துவ முகாம்கள், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்ற 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தி போலியோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியுள்ளோம். ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, போகலூர், கிளியூர், புதுமடம், வேதாளை, பனைக்குளம் போன்ற பகுதிகளில் 564 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.37 லட்சம் கல்வி உதவிகள் வழங்கியுள்ளோம். நோன்பு பெருநாளுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்பில் தானம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ராமநாதபுரம், மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் கல்வி, மருத்துவம், சிறுதொழில் துவங்க நகை ஈடாக பெற்று வட்டியில்லாமல் கடன் வழங்கியுள்ளோம். நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி நிதிஉதவி வழங்க முயற்சிப்பேன்.மீனவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியை துவங்குவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க குரல் கொடுப்பேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். 6 சட்டசபை தொகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் சாலை வசதிகள், ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து கொண்டு வர முயற்சி செய்வேன். கடல்சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடல்சார் பல்கலை., கொண்டு வர முயற்சிப்பேன்.

எங்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகவே சேவை செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக அரசியல் ரீதியாக மக்களை சந்திப்பதால், மக்கள் எங்களை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளனர்.எங்களுடன் புதிய தமிழகம் கட்சியினரும் சேர்ந்து பணியாற்றுவது எங்களுக்கு வலு. அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம், பெரியபட்டினம், கமுதி, வேதாளை, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி, மணமேல்குடி, மேலபுதுக்குடி, காஞ்சிரங்குடி, நரிப்பையூர், சிக்கல் வாலிநோக்கம் உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், எங்களின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சலிமுல்லாகான் கூறினார்

நன்றி: தினமலர்

1 comment:

  1. நாடு எங்கே போய் கொண்டுருக்கிறது என்பதற்கும் இந்திய முஸ்லிம் களின் நிலையும். சிறு எடுத்துக்காட்டு. இந்த தேர்தலில் வன்முறை .
    [red]உதவாதினி ஓர் தாமதம் உடனே விழி
    கொலை வாளினை எடடா கொடியோன் செயல் அறவே[/red]

    ReplyDelete