Friday, May 15, 2009

கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?

சென்னை ஐஸ் அவுஸ் வாக்கு சாவடியில் மோதல் சம்பவம் முறைகேடு நடந்துள்ளதா என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை.
கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?


சென்னை, மே.15 சென்னை ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

வன்முறை-கலவரம்
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறன், அ.தி.மு.க. சார்பில் முகமதுஅலி ஜின்னா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். மத்திய சென்னை தொகுதியில் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடைபெற்றது. அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள என்.கே.டி. பெண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடவந்த திமுகவினரை தடுத்த மனித நேய மக்கள் கட்சியினர் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சென்னை லயோலா கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரி விசாரணை
இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நேற்று மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா, மத்திய தேர்தல் பார்வையாளர் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் பார்வையிட்டனர். இந்த வாக்கு சாவடியில் தேர்தல் நடைபெற்றபோது முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா வன்முறை நடைபெற்ற வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்பு இது சம்பந்தமாக அறிக்கையை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அனுப்பிவைத்தார். இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

வன்முறை நடைபெற்ற 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை.

மத்திய சென்னை தொகுதியில் 10 வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை


சென்னை, மே.15 - முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 10 வாக்குசாவடிகளை தி.மு.க.வினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வன்முறையை நிகழ்த்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய சென்னை தொகுதிகளிலுள்ள 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும்.
மறுவாக்குபதிவு நடக்கும் வரை மத்திய சென்னை தொகுதியின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

திமுகவின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து INTJ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

மத்திய சென்னை தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தனது அரசு அதிகாரத்தையும் பணபலத்தை பயன்படுத்தி ஜனநாய ரீதியில் தேர்தலை சந்திக்க திறனியற்ற திமுக தனது குண்டர் படையின் மூலமும் முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட த.த.ஜ அமைப்பின் இனதுரோகிகளின் உதவியுடனும் கள்ள ஓட்டுபோட வந்த ஜனநாய துரோகிகளை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்தும், அதை வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும் வன்முறை நடைபெற்ற பகுதியில் மறுவாக்கு பதிவு நடத்தக் கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.



திமுகவினர் அத்துமீறல் பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்.

மத்திய சென்னை ஐஸ் ஹவுசில் வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடதத்திய திமுக வின் அத்துமீறலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மாநிலச் செயலாளர் சகோதரர் அ.ஃபக்குருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை.

Thursday, May 14, 2009

சென்னை ஐஸ் அவுஸ் பகுதி போர்க்களமானது

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியே போர்க்களமானது

தி.மு.க-மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடும் மோதல் 8 பேர் காயம்; கார்கள், வீடு அடித்து நொறுக்கப்பட்டன
சென்னை, மே.14 சென்னை ஐஸ் அவுஸ்சில் தி.மு.க- மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். தி.மு.க. பகுதி செயலாளரின் வீடும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளின் 2 கார்களும் தாக்குதலில் சேதம் அடைந்தது.

போலீஸ் கமிஷனரிடம் மனு
மத்திய சென்னை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி நேற்று காலை 10.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருவல்லிக்கேணி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும், எனவே 97-வது வார்டில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


இந்த நிலையில், 12 மணிக்கு ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் கும்பல் ஒன்று கள்ளஓட்டு போட முயற்சி செய்வதாக கூறி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 கார்களில் அங்கு வந்தனர். அப்போது அங்குள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான தி.மு.க.வினர் கூட்டமாக கூடியிருந்தனர். அப்போது தி.மு.க.வினருக்கும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போர்க்களமானது
காரில் வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை தாக்கினார்கள். இதில், அசன் அலி என்பவருக்கு கார் கண்ணாடி குத்தியது. மேலும், காரில் இருந்தவர்களுக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காருக்குள் இருந்த 7 பேரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

உருட்டுக் கட்டை தாக்குதலில் காயம் அடைந்த சிலர் ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. உருட்டுக் கட்டைகளையும் சுழற்றி அடித்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் அந்த சாலையே போர்க்களம் போல காட்சியளித்தது. மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வந்த 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரக்காரர்கள் ஓட்டம்
இந்த மோதல் சம்பவம் பற்றி சென்னை நகர் முழுவதும் காட்டுத்தீ போல தகவல் பரவியது. உடனடியாக ஐஸ் அவுஸ் பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரோடும், அதிரடிப்படை போலீசாரோடும் ஐஸ்அவுஸ் பகுதிக்கு விரைந்தனர். போலீஸ் படையினர் விரைந்து வருவதை பார்த்து கலவரக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மனிதநேயமக்கள் கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு நடந்ததாக தகவல் கிடைத்தது. உடனே துணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிடுவது போல திரண்டனர். ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் அப்துல்சமதுவை அழைத்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டப்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதிமொழி அளித்தார்.

4 பிரிவின் கீழ் வழக்கு
மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியிடமும் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அதன்பிறகு, மனிதநேய மக்கள் காட்சி சார்பில் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மீது ஐஸ்அவுஸ் போலீசார் இ.பி.கோ 324, 147, 148, 502/2 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வீடு மீது கல்வீச்சு
இதற்கிடையே தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் வீடு மீது பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினார்கள். வீட்டின் இரும்புக் கேட்டை வளைத்து, பயங்கர தாக்குதல் நடந்தது. வீட்டின் முன்பக்க அறையில் இருந்த ஒரு ஸ்கூட்டர், டி.வி. கம்ப்யூட்டர் மற்றும் மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரின் வீடு அருகே இருந்த தி.மு.க.வின் தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள்.

போலீசார் அடித்து விரட்டினர்
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் முகாமிட்டிருந்த கமிஷனர் ராதாகிருஷ்ணன் 100 போலீசாருடன் டாக்டர் பெசன்ட் ரோட்டில் அணிவகுத்து வந்தார். அந்த ரோட்டில் அனைத்து தெருக்களிலும் புகுந்து கூட்டமாக கூடி நின்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதர்சயீத் அங்கு வந்தார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அவர் கடுமையான வாக்குவாதம் செய்தார். தி.மு.க.வினர் திருவல்லிக்கேணி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புகார் கூறினார். அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் ஐஸ்அவுஸ் பகுதியில் அமைதி நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:

மறுவாக்குபதிவு
தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர் தலைமையில் 100&க்கும் மேற்பட்ட ரவுடிகள் மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் அசன் அலி, ஜாகீர் உசேன், காஜாபாய், ஹைதர் அலி, கலாவுதீன், பாரூக், நூர்ஜான் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேர்மையாக நடக்கவில்லை. கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. எனவே இந்த 10 வாக்குசாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.

தொடர்ந்து பதற்றம்
ஹைதர் அலி போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுத்தார். காயம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் முதலில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். 2 பேருக்கு கண்ணில் அடிபட்டிருந்ததால் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியிலும் மற்றவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
தி.மு.க. தரப்பில் காயம் அடைந்த சாரங்கபாணி என்பவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு
ஐஸ்அவுஸ் மோதல் சம்பவம் தொடர்பாக, தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட 20 பேர் மீது ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதலை தூண்டியதாக மத்திய சென்னை தி.மு.க.வேட்பாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் வரவில்லை என்பதால் தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

நேற்று மாலையில் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கிய பின்னரே, மனிதநேய மக்கள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி

ம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸில் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பகுதி செயலாளரையும் தேடி வருகின்றனர்.

நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது ஐஸ் ஹவுஸ் பகுதியில், திமுகவினர் திடீர் வன்முறையில் இறங்கினர்.

என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

மனித நேய மக்கள் கட்சியினரை அவர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெறித்தனமாக தாக்கினர். ஓட ஓட விரட்டித் தாக்கினர்.

இதில் அசன்அலி உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த மோதலால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகளுக்குப் பெயர் போன அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார், வடிவேல், மூர்த்தி, தனசேகர், சசிகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலை நடத்தச் சொல்லி தூண்டி விட்டதாக வேட்பாளர் ஹைதர் அலியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜெ, ராமதாஸ் கண்டனம்:

திமுகவினரால் மமகவினர் தாக்கப்பட்டதற்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,.

நேற்று காலை மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று திமுக ரவுடி கும்பல் அந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முனைந்துள்ளது.

இதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

கழக தொண்டர்கள் மீதும், இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதும் திமுகவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐஸ்ஹவுஸ் பகுதியில், வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டுப்போட்டுக்கொண்டிருந்த கும்பலை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கள்ள ஓட்டுப்போட முயற்சித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த வன்முறை தாக்குதலையும், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி:Thats Tamil

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி
இன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

சிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.